Home Enviro Meet Enviro Meet November 2010
Enviro Meet November 2010 Print E-mail
Written by Kalidasan   

ஓசை சுற்றுச் சூழல் அமைப்பின் நவம்பர் மாத சூழல் சந்திப்பு நிகழ்ச்சி, கோவை, காந்திபுரம் தமிழ்நாடு உணவக அரங்கில் கடந்த 28.11.10 ஞாயிறு மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சமூகசேவகர் திரு.ஆர்.வி.சி. நடராஜ் தலைமை தாங்கினார். இதில் 'பாம்புகள் - பயம் வேண்டாம்' என்ற தலைப்பில் சென்னையைச் சேர்ந்த சூழலியலாளர் திரு. ஜே. ஆனந்த் சிறப்புரையாற்றினார்.

பாம்புகள் சுமார் 13 கோடி (130மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பு பல்லி இனத்திலிருந்து பரிமாண வளர்ச்சியில் தோன்றியவைகள். பாம்பின் மிகப்பழமையான புதைப் படிவம் சகாரா பாலைவனத்தில் கிடைத்துள்ளது. உலகில் சுமார் 2700 வகையான பாம்புகள் உள்ளன. இந்தியாவில் 20 வகையான கடற்பாம்புகளையும் சேர்த்து 270 வகை பாம்புகள் உள்ளன. இவற்றில் 62 வகை பாம்புகள் விசத்தன்மை கொண்டவை. ஆனால் நமது பகுதியில் 4 வகை பெரும் பாம்புகள் என்றழைக்கப்படும் கட்டுவிரியன், நாகப்பாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் ஆகியவை மட்டுமே மனிதர்களை கொல்லக்கூடிய அளவு விசம் கொண்டவை. இந்தியாவில் ஆண்டு தோறும் 50000 பேர் பாம்புக் கடியில் உயிரிழக்கின்றனர். ஆனால் இதில் 5000 பேர் மட்டுமே பாம்பின் விசத்தால் இறக்கின்றனர். மீதமுள்ள 90 சதவீதம் பேர் பாம்பை பற்றிய பயத்தால்தான் மரணமடைகின்றனர். மேலே சொன்ன 4 வகை விசப்பாம்புகள் கடித்தாலும், எல்லா கடியிலும் அவை விசத்தை உமிழ்வதில்லை. 90 சதவிதம் அவை தீண்டும்போது மரணம் எற்படுவதில்லை.

நான்கு பெரும் பாம்புகளில் முதன்மையானது கட்டுவிரியன். இது நாகப் பாம்பைவிட 15 மடங்கு வீரியமுள்ள விசம் கொண்டது. இரவில் நடமாடக்கூடியது. பகலில் அரிதாக தென்பட்டாலும் சாதுவாகக் காணப்படும். இப்பாம்பு கடிபட்டவர்களுக்கு வலி பெரிதாக தெரியாது. ஆனால் 45 நிமிடங்களில் நரம்பு மண்டலத்தை வெகுவாக பாதித்துவிடும். சுமார் 4 முதல் 4½ அடி நீளம் கொண்ட இப்பாம்பின் உடல் முக்கோன வடிவில் இருக்கும். வழுவழுப்பான செதில்களை கொண்ட இதன் கறுப்பு உடலில் சீரான இடைவெளி கொண்ட இரட்டை வெள்ளை பட்டைகள் காணப்படும். நாகப்பாம்புகள் பகல், இரவு என்று எல்லா நேரத்திலும் நடமாடக் கூடியது. கண்ணாடி விரியன் 4 அடி நீளமுள்ள உடல் பருமனாகவும் வால் குட்டையாகவும் உள்ள பாம்பு. இதன் விசம் இரத்த அனுக்களை சேதப்படுத்தக் கூடியது. சுருட்டை விரியன் ஒன்றரை அடி நீளமே உள்ள சிறிய பாம்பு. ஆனால் 12மி.கிராம் விசத்தை உமிழக்கூடியது. இந்த நாலு வகை பாம்புகள் தவிர நமது மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சில வகைப் பாம்புகள் மெல்லிய விசத்தன்மை கொண்டவை. ஆனால் அந்த விசம் மனிதர்களை கொல்லும் அளவிற்கு கிடையாது.

நமது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காணப்படும் இராஜநாகங்கள் உலகில் உள்ள தரையில் வாழும் விசப்பாம்புகளில் மிக நீளமானதாகும். இது 19அடி வரை நீளமுடையது. மிக அதிக அளவில் விசம் கொண்டவை. 7மி.லிட்டர் விசத்தை இவை உமிழ முடியும். ஒரு மனிதனைக் கொல்ல 0.3மி.லிட்டர் அளவு விசமே போதுமானதாகும். ஆனாலும் இராஜநாகத்தை விசமுள்ள பெரும் பாம்புகள் பட்டியலில் சேர்க்காமல் இருப்பதற்கு காரணம் இவை மனிதர்களை அரிதிலும் அரிதாகவே கடித்துள்ளன. கூர்மையான பார்வை கொண்ட இராஜநாகங்கள் மனிதர்கள் தொலைவில் வரும்போதே அறிந்து விலகி ஓடிவிடும். எனவே இதனை Gentleman Snake என்று சொல்வார்கள். இராஜநாகங்கள் பிற பாம்புகளையும் உணவாகக் கொள்ளும். இப் பாம்பு கூடுகட்டும் பழக்கம் உடையது. கீழே விழுந்த இலைதழைகளை சேர்த்து கூடாக்கி அதில் முட்டையிட்டு அடைகாக்கும். அப்போது அவை உணவு உட்கொள்வதில்லை. முட்டையிலிருந்து புதிய குட்டிகள் வெளிவருவதற்கு ஒரு நாள் முன்பாகவே தாய்பாம்பு கூட்டைவிட்டு வெளியேறிவிடும். நாகப்பாம்பின் விசத்தைவிட இராஜநாகத்தின் விசத்தின் வீரியம் குறைவானது. ஆனால் அளவு மிக அதிகம்.

நமது பகுதியில் காணப்படும் மலைப்பாம்புகள் விசமற்றவை. சாதுவானவை. ஆனால் பசித்திருக்கும்போதோ முட்டைகளின் அருகில் இருக்கும்போதோ அவை நம்மை தாக்கக் கூடும். அவற்றின் முன்பற்கள் உட்பக்கம் வளைந்திருப்பதால் அவை கடித்தால் எளிதில் மீள முடியாது. நமது சதையை பிய்த்தெடுத்துவிடும். மேற்கு தொடர்ச்சி மலைகளில் இரண்டு வகையான பறக்கும் பாம்புகள் உள்ளன. உண்மையில் அவை பறப்பது இல்லை. தன் உடலை விரித்து ஒரு உயர்ந்த மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு மிதந்து செல்கின்றன. சுமார் 100அடி தூரம் வரை அவைகளால் மரம் விட்டு மரம் தாவமுடியும். வலைக் கடியான் எனப்படும் பாம்பே மிக அதிக விசமுள்ள கடற்பாம்பாகும்.

பாம்பு விசம் இருவகையான பாதிப்புகளை மனிதர்களுக்கு உண்டு பண்ணும். கட்டுவிரியன், நாகப்பாம்பு ஆகியவற்றின் விசம் நரம்பு மண்டலத்தை பாதிக்கக் கூடியது. கண்ணாடி விரியன், சுருட்டைவிரியன் ஆகியவை ரத்த அனுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இரவு மற்றும் அதிகாலை நேரத்தில்தான் பெரும்பாலானவர்கள் பாம்பு கடிக்கு இலக்காகின்றனர். அதனால் எவ்வகை பாம்பு கடித்தது என்பதும், அதன் விசத்தன்மையும் கடிபட்டவருக்கு தெரியாது. ஆனால் விச பாம்புகள் கடித்தால் சில அறிகுறிகளை உணர முடியும். நாகப்பாம்பு, கட்டுவிரியன் ஆகியவை கடித்தால் மூச்சுத் திணறல், கண் இமைகள் மூடிக்கொள்ளுதல், தூக்கம் வருதல், நாக்கு மரத்து பேச முடியாமல் போதல் ஆகிய அறிகுறிகளும், கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் கடித்தால் கடிப்பட்ட இடத்தில் எரிச்சல், தொடர்ந்து இரத்தம் வெளியேறுதல், ஈறுகளில் ரத்த கசிவு ஆகிய அறிகுறிகளும் தென்படும். அதேபோல் விசப்பாம்பு கடித்தால் இரண்டு பற்களின் அச்சு மட்டுமே கடிபட்ட இடத்தில் தெரியும். ஆனால் விசமற்ற பாம்புகள் கடித்திருந்தால் ஒரு பிறைவடிவில் பற்கள் பதிந்திருக்கும்.

பாம்பு கடிக்கு கடிபட்ட இடத்திற்கு மேல் கட்டுபோடுதல், காயத்தை கீறி ரத்தம் உறிஞ்சுதல் ஆகியவை ஆபாத்தானவை. ஏனெனில் கட்டு போடுவதன் மூலம் ரத்த ஓட்டம் தடைபட்டு நிலைமை மேலும் சிக்கலாக வாய்ப்புள்ளது. காயத்தை கீறினால் மேலும் ரத்தம் வெளியேறி அதன் மூலமும் மரணம் நிகழ வாய்ப்புள்ளது.

பாம்புக்கடிபட்டவர்களின் கடிபட்ட இடத்தை அழுத்தாமலும், அசையாமலும் வைத்து மிக விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதே சிறந்த வழியாகும். கடிபட்டவரை பயப்படுத்தாமல் நம்பிக்கையூட்டுவதே மிக முக்கியமானதாகும்.

விசபாம்புகளால் கடிபட்டவர்களுக்கு கொடுக்கப்படும் விசமுறிவு மருந்து பாம்புகளின் விசத்திலிருந்தே தயாரிக்கப்படுவை. 4 பெரும் விச பாம்புகளான கட்டுவிரியன், நாகப்பாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் ஆகியவைற்றின் விசத்தை கலந்து சிறிய அளவில் குதிரைக்கு செலுத்தப்படும். அப்போது குதிரையில் சுரக்கும் விச எதிர்ப்பு பொருளை அதன் ரத்ததிலிருந்து பிரித்தெடுத்து விசமுறிவு மருந்து தயாரிக்கப் படுகிறது.

பாம்புகளுக்குள்ள ஜேக்கப்சன் உறுப்பு எனப்படும் சிறப்பு உறுப்பு பிற உயிரினங்களின் வாசனையை பதிவு செய்து கொள்கின்றன. தமது பிளந்த நாக்குகள் மற்றும் ஜேக்கப்சன் உறுப்பு ஆகியவற்றின் மூலம் உணரும் வாசனையைக்கொண்டு தனது உணவையும், எதிரியையும் அடையாளம் காண்கின்றன.

விசமற்ற பாம்புகளின் எச்சிலிலும் சிறிது விசமுன்டு. அது அதன் இரையை கொல்ல பயன்படுகிறது.

சிலபாம்புகளுக்கு நுட்பமான வெப்ப வேறுபாட்டை உணரும் திறன் உண்டு. அதன்முலம் தமது இரையை கண்டு கொள்கின்றன.

பாம்புகள் தமது உட்செவிகள் மற்றும் அதிர்வுகள் மூலம் ஒலியை உணர்கின்றன. மெல்லிய அதிர்வுள்ள ஒலியை பாம்புகளால் கேட்க முடியும்.

கோடை வெப்பம் சுட்டெரிக்கும் போது பாம்புகள் தமது பொந்துகளில் தன்னிலை மறந்து அறிதுயில் நிலையில் ஆழ்கின்றன.

பாம்பின் விசப்பற்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் விழுந்து முளைப்பவை. பாம்புகளின் வயதையும், உடல் வலிமையையும் பொறுத்து அப்பற்கள் முளைக்கும் காலம் வேறுபடும். உடலில் சுரக்கும் வேதி மாற்றங்களால் பாம்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் தோலை உரிக்கின்றன. அப்போது சில நாட்களுக்கு அதன் கண்பார்வை மங்கியிருக்கும்.

ஆண்பாம்புகளை கவர்வதற்காக பெண்பாம்புகள் இனப்பெருக்க காலத்தில் ஒரு வகை வாசனை திரவத்தை உமிழ்கின்றன. மனிதர்களால் பெண்பாம்புகள் கொல்லப்படும்போது வெளிப்படும் திரவத்தின் வாசனையால் கவரப்படும் ஆண்பாம்புகள் அங்குவரக்கூடும். இதனையே பாம்புகள் பழிவாங்க வந்து விட்டதாக கதை பரப்பப் படுகிறது.

பாம்புகள் பால் குடிக்கும், கண்ணைக் கொத்தும், பழிவாங்கும் என்பவை மூடநம்பிக்கைகளே. மரங்களின் வாழும் விசமற்ற கொம்பேறி மூக்கன் பாம்பு தான் கடித்தவரை சுடுகாட்டில் வந்து பார்க்கும் என்பதும் மிகப் பொpய மூடநம்பிக்கையே.

 

Enviro bits

The virtual-water content of a product (a commodity, good or service) is the volume of freshwater used to produce the product, measured at the place where the product was actually produced (production-site definition). It refers to the sum of the water use in the various steps of the production chain.

Water Footprint Network


நிலம் வாழ
நீர் வாழ
நம் தலைமுறைகள் தழைத்து வாழ..

இயற்கை காக்கும் எமது பணிகளில் நீங்களும் பங்கேற்கலாம்