| கோவை நகரில் மரங்களை வெட்டுவதைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை |
|
|
| Written by osai |
|
கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான "ரிசர்வ் சைட்'டில் இருந்த எட்டு மரங்கள் வெட்டி 17.02.2011 அன்று வீழ்த்தப்பட்டுள்ளன.கோவை நகரில் மரக்கன்றுகளை வளர்க்க வனத்துறை, சிறுதுளி, ஓசை, ராக் உள்ளிட்ட பல் வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் பெரும்பாடுபட்டு வருகின்றன. மறுபுறத்தில், சத்தமே இல்லாமல் அரசுத்துறைகளாலும், தனியார் நிறுவனங்களாலும், தனி நபர்களாலும் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக, ரேஸ்கோர்ஸ் பகுதியிலிருந்த பழமையான இரண்டு மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. கோவை நகரில் மரங்களை வெட்டுவதைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள கோவையின் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிர்வாகிகளும் சேர்ந்து, கலெக்டர் உமாநாத்தை சந்தித்து மனுக் கொடுத்தனர். அதன் அடிப்படையில், அரசுக்கு சில பரிந்துரைகளை மாவட்ட நிர்வாகமும் அனுப்பி வைத்துள்ளது.இந்த முயற்சிகள் நடந்தாலும் மரங்கள் வெட்டுவதும் தொடர்கிறது. கோவை மாநகராட்சி 10வது வார்டுக்குட்பட்ட ராஜலட்சுமி நகரில் எட்டு மரங்கள், இரவோடு இரவாக வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. பொது ஒதுக்கீட்டு இடத்தை, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் சுத்தம் செய்து, பல ஆண்டுகளுக்கு முன்பே மரங்களை வளர்த்துள்ளனர்.சிறுதுளி அமைப்பின் சார்பிலும் சில மரங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளைக் கடந்து, நன்கு செழித்து வளர்ந்து வந்த அந்த மரங்களை நேற்று காலையில் காணவில்லை. குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் பார்த்தபோது, மூன்று இலுப்பை, மூன்று வேம்பு, இரண்டு மரமல்லி என எட்டு மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதோடு, அங்கு மீண்டும் மரம் வளராமலிருக்க அமிலமும் ஊற்றியிருந்ததைப் பார்த்து அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.விசாரித்தபோது, அதே பகுதியிலுள்ள தொழிலதிபர் ஒருவர், அந்த மரங்கள் வளர்ந்தால் தன்னுடைய வீட்டுக்கு பாதிப்பு வருமென்று கருதி, ஆட்களை வைத்து வெட்டி அகற்றியது தெரியவந்தது. கொங்கு நாடு முன்னேற்றக் கழக மாநகர அமைப்பாளர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் வந்து பார்த்து, மரங்களை வெட்டிய நபரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கோவை "ராக்' செயலர் ரவீந்திரன் மற்றும் சிறுதுளி நிர்வாகிகள் சிலரும் அங்கு வந்தனர். மரத்தை வெட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ்சிடம் முறையிட்டனர். போலீசார் வந்ததும், "அப்படித்தான் வெட்டுவேன்' என்ற தொனியில் பேசியவர், "பதிலுக்கு மரங்களை வளர்த்துத் தருவதாக' ஒப்புக் கொண்டார்.வருவாய்த்துறையின் முறையான அனுமதியின்றி, மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் மரங்களை வெட்டியது பற்றி மாநகராட்சி அதிகாரிகள் யாரும் கவலைப்படவே இல்லை. அனுமதியின்றி மரங்களை வெட்டுவதைத் தடுக்க, காவல்துறையின் ஒத்துழைப்பைக் கேட்க சூழல் அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக, மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவை சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். ஆதாரம் : தினமலர் |
இயற்கை காக்கும் எமது பணிகளில் நீங்களும் பங்கேற்கலாம்