| Enviro Meet April 2011 |
|
|
| Written by osai |
|
ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் 'சூழல் சந்திப்பு' 24.04.2011 அன்று மாலை 6:30 மணியளவில் கோவை காந்திபுரம் தமிழ்நாடு உணவக அரங்கில் நடைடிபற்றது. இதில், 'தமிழர் திணையியல் கோட்பாடும், வேளாண் மரபுகளும்'என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் எழுத்தாளர் திரு.பாமயன் சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சிக்கு வக்கீல் மதிவாணன் தலைமை வகித்தார். "பாரம்பரிய பயிர்களை அதிகம் உற்பத்தி செய்வதால், விவசாயத்துக்கான தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்கலாம்; ஆரோக்கியமாகவும் வாழலாம்' என, சூழலியல் படைப்பாளர் பாமயன் தெரிவித்தார். தமிழ் மக்களின் நிலத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திணைக்கோட்பாடு, தனிச்சிறப்பு வாய்ந்தது. அறிவியல் அறிஞர்கள் வகுத்த சுற்றுச்சூழலியல் மண்டலங்கள் என்ற கோட்பாடுக்கு அது இணையானது. பண்டைய சுமேரிய, எகிப்து மற்றும் சிந்து சமவெளி நாகரிகங்களை வழி நடத்தியவர்கள், மதம் சார்ந்த மனிதர்களாக இருந்தனர். ஆனால், தமிழர்களின் வாழ்வியலை வழி நடத்தியது இயற்கைதான்.தமிழர்களின் திணைக்கோட்பாடு, உயிரியல் பன்மயம், உயிர்ம நேயம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டது. சங்க இலக்கியங்கள், காதலையும், வீரத்தையும் சிறப்பித்துக் கூறினாலும், அவற்றிலுள்ள பல செய்திகள், இயற்கையின் மீது தமிழர்களுக்கு இருந்த அளவற்ற அன்பை வெளிப்படுத்துவதாகவுள்ளது. பண்டைத் தமிழர்கள், மலை சார்ந்த இடங்களில் உழாமலே விவசாயம் செய்துள்ளனர். காடுகளில் ஓரளவு, நிலத்தைச் செப்பனிட்டு விவசாயத்துக்கேற்ப அவற்றை மாற்றினர். நதிகளைச் சார்ந்த இடங்களில், பெருகி வரும் வெள்ளத்தை கட்டுப்படுத்தி, அணைகளைக்கட்டி, விவசாயத்துக்குப் பயன்படுத்தினர். தமிழரின் பாசன முறையின் வலிமை மிகுந்த எடுத்துக்காட்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கரிகாற்சோழன் கட்டிய கல்லணை. அதே காலகட்டத்தில் உருவான எகிப்து நாட்டின் அணை அழிந்து விட்டது. கல்லணை இன்னும் பயன்பாட்டில் உள்ளது. சங்கிலித் தொடர் ஏரிப்பாசனத் தொழில் நுட்பத்தை அக்காலத் தமிழர்கள் பயன் படுத்தினர். இது உலகிலேயே தனித்தன்மை வாய்ந்த தொழில்நுட்பம். கடை மடை நிறைந்ததும் முதல் மடை நிறையச் செய்யும் ஒழுங்கு முறையால் ஒரு சமூக நீதியும் காக்கப்பட்டது. தமிழர்கள், நுட்பமான வேளாண் மரபை கொண்டிருந்தனர். செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் ஆதிக்கத்தால் நிலம் வளமிழந்து மரபின் நுட்பம் மறைந்து விட்டது. தெளிப்பு மருந்துகளால் அழிக்க முடியாத நுண்ணுயிரிகளையும், சிறுபூச்சிகளையும் ஊடுருவிப்பாயும் மருந்துகளைக் கொண்டு முற்றிலுமாக அழிக்க முற்படுவதால், அப்பயிர்களைப் பயன்படுத்தும் மனிதனுக்கும் நோய்கள் வந்து சேர்கின்றன. தானியப்பயிர்களில் 55 சதவீதம், மானாவாரி சாகுபடியால் கிடைக்கின்றன. சத்து மிகுந்த இவை அனைத்தும், குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி விளைவிக்கப்படுகின்றன. தினை, வரகு, சாமை போன்ற இந்த பாரம்பரியப் பயிர்களை அதிகம் உற்பத்தி செய்வதால்விவசாயத்துக்கான தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்கலாம்; அவற்றைச் சாப்பிடுவதால் ஆரோக்கியமாகவும் வாழலாம். வேளாண்மையியல் தற்சார்பு தேவை. வேளாண் முறைகள் அனைத்தும் உள்ளூர் மயமாக்க வேண்டியது அவசியம். வேளாண் பரப்பையும், வேளாண்மையையும் காப்பாற்ற வேண்டும். இயற்கை வேளாண்மை வளர்த்தெடுக்க வேண்டும்.இவ்வாறு பாமயன் பேசினார். |
There are more than 330 species of butterflies in Western Ghats
இயற்கை காக்கும் எமது பணிகளில் நீங்களும் பங்கேற்கலாம்