Home Enviro Meet Enviro Meet July 2011
Enviro Meet July 2011 Print E-mail
Written by osai   

ஓசை அமைப்பின் சூழல் சந்திப்பு நிகழ்ச்சி 29.07.2011 வெள்ளிக்கிழமை மாலை கோவை காந்திபுரம் தமிழ்நாடு உணவக அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவை, ஆனைகட்டியிலுள்ள சலீம்அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தின் முதுநிலை அறிவியலாளர் முனைவர். பி.பிரமோத் கலந்து கொண்டு பல்லுயிரியப் பாதுகாப்பு எனும் பொருளில் சிறப்புரையாற்றினார். 19ம் நூற்றாண்டில் வேட்டையாடுவது பெருமையாகக் கருதப்பட்டது. 20ம் நூற்றாண்டில் வன உயிரின பாதுகாப்பின் அவசியம் உணரப்பட்டது. 21ம் நூற்றாண்டு பல்லுயிரிய பாதுகாப்பை வலியுறுத்துகிறது.

பயலாஜிகல் டைவர்சிட்டி (Biological diversity) என்பதிலிருந்து பயோடைவர்சிட்டி (Biodiversity) என்னும் பல்லுயிரியம் என்ற வார்த்தை வந்தது. 1980களில்தான் இந்த வார்த்தை பயன்பாட்டிற்கு வந்திருந்தாலும் இன்று உலகெங்கும் அதிகம் பேசப்படுவதாக உள்ளது. விவசாயப்பயிர்களில், காட்டுத்தாவரங்களில், கடல் உயிர்களில், பறவையினங்களில் என எல்லாவற்றிலும் பல்லுயிரியம் உள்ளது.

சீனர்களும், ஆப்ரிக்கர்களும் பார்ப்பதற்கு மிகவும் வேறுபட்டு காணப்பட்டாலும் அவ்விரு இன ஆண், பெண் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்வதில் எவ்வித சிக்கலும் இல்லை. ஏனெனில் இருவரும் மனித இனமே. ஆனால் அண்டங் காக்கையும், மணிக்காக்கையும் பார்பதற்கு பெரிய வேறுபாடு இல்லா விட்டாலும் அவை இணைவதில்லை. ஏனெனில் அவை வெவ்வேறு வகையானவை. பல்லுயிர் பரவலை இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

உலகில் குறைந்தது 10 மில்லியன் (ஒரு கோடி) உயிரின வகைகள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 17 லட்சம் வகையான உயிரினங்கள்தான் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு கோடி உயிரின வகைகளில் ஒரு வகைதான் மனித இனம்.

இந்தியா மிகப் பெரிய பல்லுயிரிய நாடுகளில் ஒன்று (Mega Biodiversity Country). உலகின் எந்த ஒரு பகுதியிலுள்ள உயிர்ச்சூழலும் இந்தியாவில் ஏதாவது ஒரு பகுதியில் இருக்கிறது. இந்தியா உலகின் மொத்த பரப்பில் 2.4% பரப்பளவு மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் உலக பல்லுயிரிய வகைகளில் 10% இந்தியாவில் உள்ளது. உலக தாவர வகைகளில் 8.9% இந்தியாவில் உள்ளது. 10 மாறுபட்ட புவியியல் அமைப்பு இங்குள்ளது.

1992ம் ஆண்டு வரை எல்லா உயிரினங்களும் பொதுச் சொத்தாக கருதப்பட்டது. தடையின்றி எந்த உயிர்வகையையும் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு கொண்டு செல்லலாம். ஆனால் 1992ல் உலக பல்லுயிரிய பாதுகாப்பு ஒப்பந்தம் வந்த பிறகு ஒரு நாட்டிலுள்ள பலவகை தாவர, விலங்கின வகைகளும் அந்த நாட்டின் சொத்தாகியது. ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் வந்தன. ஆனால் நமது தாவரங்களையோ பிற உயிர்களையோ யாராவது திருடினால் நம்மால் சண்டைபோட முடிவதில்லை. ஏனெனில் நமது நாட்டின் பல்லுயிரியம் பற்றி நம்மிடம் போதுமான ஆவணம் கிடையாது. அதனால்தான் நாம் பாரம்பரியமாக பயன்படுத்திவரும் மஞ்சள், வேம்பு ஆகியவற்றின் மருத்துவ குணங்களை தாங்கள் கண்டுபிடித்ததாக வெளிநாடுகள் உரிமை கொண்டாடின.

மஞ்சள் மருத்துவ குணம் கொண்டது என தாம் கண்டுபிடித்ததாக ஒரு அமெரிக்க நிறுவனம் காப்புரிமை வாங்கியது. காலம் காலமாக அதன் மருத்துவ மகிமையை நாம் தெரிந்து வைத்திருந்தாலும் அதற்கான பதிவு நம்மிடம் இல்லை. எனவே நம்மால் உரிமை கொண்டாட முடியவில்லை. நல்ல வேலையாக பண்டைய இந்தியாவிற்கு வந்து சென்ற ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணி தமது குறிப்பில் நமது மஞ்சள் பயண்பாட்டை பற்றி குறிப்பிட்டிருந்ததைக் கொண்டு மஞ்சளுக்கான உரிமையை திரும்பப்பெற்றோம். வேம்பிற்கும் இப்படித்தான் நடந்தது.

இந்தியாவில் 18 ஆயிரம் வகை பூக்கும் தாவரங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றின் பூ, இலை, பட்டை, மணம் எல்லாம் வேறுபட்டிருக்கும். அந்த வேறுபாட்டை உணரும் அறிவு நமக்கு வேண்டும். நமது கிராம மக்களே நம் பல்லுயிரியத்தை பாதுகாத்து வந்துள்ளனர். நமது தாவரங்களை பற்றிய பேரறிவை நமது முன்னோர்கள் கொண்டிருந்தனர். நான் அமைதிப் பள்ளத்தாக்கில் ஆய்வு செய்தபோது ஒரு பழங்குடியின மூப்பன் சரியாக கண் தெரியாத நிலையிலும் முகர்ந்து பார்த்தே பல தாவரங்களை அடையாளம் காட்டினார். ஆனைகட்டி அருகிலுள்ள சேம்புக்கரை கிராமத்து இருளர் பழங்குடிகளிடம் சில மணிநேரம் பேசியபோது அவர்கள் 272 வகையான தாவரங்களின் பெயர்களைத் தெரிந்துவைத்திருந்தார். அவற்றில் 42 வகைக் கீரைகளும் அடங்கும். ஆனால் அங்குள்ள இளைய தலைமுறைக்கு அவற்றை தெரிந்து கொள்ளும் அக்கரை குறைந்துள்ளதை அறிய முடிந்தது.

2002ம் ஆண்டு இந்திய பல்லுயிரியச் சட்டம் உருவாக்கப்பட்டது. தேசிய, மாநில பல்லுயிரின ஆணையங்கள் உருவாக்கப்பட்டன. நாடெங்கும் உள்ள இரண்டு இலட்சத்திற்கும் மேலான கிராம, நகர பஞ்சாயத்துகளுக்கும் நமது பல்லுயிரியத்தை ஆவணப்படுத்தவும், பாதுகாக்கவுமான பொறுப்புள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் 'மக்கள் பல்லுயிரிய பதிவேடு' (People Biodiversity Register) உருவாக்கப்பட வேண்டும். அந்தந்த ஊர்களிலுள்ள அனைத்து வகையான மூலிகைகள், மரங்கள், பயிர் வகைகள், பிற தாவரங்கள், பறவைகள் உள்ளிட்ட பிற உயிரினங்களும் அதில் பதிவு செய்யப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கொண்டு இப்பதிவை முறைப்படுத்த வேண்டும்.

வாழ்விட அழிவு, வாழ்விடம் துண்டாகுதல், சுற்றுச்சூழல் சீர்கேடு, நவீன வியாபாரம் மற்றும் உலகமயமாதல், வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவையே பல்லுயிரிய அழிவிற்க்கு காரணமாகின்றன. உலகிலுள்ள பறவையினங்களில் 12% பறவைகள் அழியும் தருவாயில் உள்ளன. இவற்றில் 70% வாழ்விடம் இழந்ததனால் அழிவை சந்திக்கின்றன.

2011லிருந்து 2020 வரையான பத்தாண்டுகளை பல்லுயிரிய பாதுகாப்பு ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. நமது பல்லுயிரியத்தை ஆவணப்படுத்தவும், பாதுகாக்கவும் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.

இக்கூட்டத்திற்கு கவிஞரும், நடிகருமான வா.ஜ.சா. ஜெயபாலன் தலைமை தாங்கினார். இலங்கைப் போரில் மனிதர்கள் மட்டுமல்லாமல் அங்குள்ள உயிர்களும் பெரும் பாதிப்பிற்கு உள்ளானது என்றார்.

 

Enviro bits

Environmental pollution means imbalance in environment. The materials or substances when after mixing in air, water or land alters their properties in such manner, that the very use of all or any of the air, water and land by man and any other living organism becomes lethal and dangerous for health.


நிலம் வாழ
நீர் வாழ
நம் தலைமுறைகள் தழைத்து வாழ..

இயற்கை காக்கும் எமது பணிகளில் நீங்களும் பங்கேற்கலாம்