Home Enviro Meet Enviro Meet December 2011
Enviro Meet December 2011 Print E-mail
Written by osai   

ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் 'சூழல் சந்திப்பு' 26.12.2011 அன்று மாலை 6:30 மணியளவில் கோவை காந்திபுரம் தமிழ்நாடு உணவக அரங்கில் நடைடிபற்றது.

இதில், 'சங்க இலக்கியத்தில் பறவைகள்' என்ற தலைப்பில், பேராசிரியர் ரத்தினம் , அவர்கள் சிறப்புரையாற்றினார்.

பேராசிரியர் ரத்தினம் பேசியதாவது:

சங்க இலக்கியம், தமிழின் தொன்மையான இலக்கியமாக, கருதப்படுகிறது. சங்க காலத் தமிழ் மக்களின் சமூக வாழ்க்கை, பண்பாடு மற்றும் நிலவியல் சார்ந்த ஏராளமான பதிவுகள், அதில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, நற்றிணை, ஐங்குறுநூறு போன்றவற்றில் வனம் மற்றும் வன உயிர்கள் பற்றிய பல்வேறு செய்திகள் உள்ளன.

சங்கப்பாடல்களில், 80க்கும் மேற்பட்ட பறவைகளைப் பற்றிய குறிப்புகள், இடம் பெற்றுள்ளன. அன்று இருந்த பறவைகள், இன்றும் உள்ளன; வானம்பாடி, நாரை, கழுகு, காடை போன்றவற்றை உதாரணம் சொல்லலாம். தமிழ் நிகண்டுகளில் (சொல் அகராதி) கூகை, கோட்டான், காடை போன்ற பறவைகளின் பெயர்களுக்கு, விளக்கம் உள்ளது. அக்காலத்தில் கழுகுகள், இருவை என்னும் பெயரில் அழைக்கப்பட்டன; இவை மாமிசத்தை மட்டுமே உண்ணும். அன்றைய நாளில், இறந்த பிராணிகள் மற்றும் போர்களில் இறப்பவர்களை அடக்கம் செய்யும் பழக்கம் இல்லை. அதனால், கழுகுகளுக்கு அதிக இரை கிடைத்தது.

கழுகு இனம், இன்றைக்கு ஏறக்குறைய அழிந்து விட்டது என்றே, சொல்ல வேண்டும். வேளாண் நிலங்களில் பயன்படுத்தப்பட்ட, பூச்சி கொல்லிகள்தான், இப்பறவை இனத்தின் அழிவுக்குக் காரணம் என, ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பறவைகள் ஆய்வாளார் சலீம் அலி, முனைவர் பட்டம் பெற்றது, தூக்கனாங் குருவியை பற்றி ஆய்வு செய்துதான். அவரது அந்த ஆய்வின் முடிவுகள், தூக்கனாங் குருவியைப் பற்றிய பல தகவல்களை, இந்த சமூகத்துக்கு வழங்கி உள்ளது. நற்றிணையிலும், தூக்கனாங்குருவி பற்றிய பாடல் இடம் பெற்றள்ளது. கொக்கு அம்பு போல் பறப்பதை பற்றி, சங்கப் பாடல்கள் குறிப்பிட்டுள்ளன. பறவைகள் இரவில் இடம் பெயர்வதை பற்றி பிசிராந்தையார் என்ற புலவர், தனது பாடல்களில் குறிப்பிடுகிறார். குமரகுருபரர் எழுதிய மீனாட்சி அம்மன் பிள்ளை தமிழில், "நாராய் நாராய் செங்கால் நாராய்' என்று நாரையின் உடல் உறுப்புகள் குறித்த, நுணுக்கமானத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

பறவைகளைப் பற்றிய பல தகவல்களைக் கொண்டிருக்கும் சங்கப் பாடல் கள், அன்றில், அன்னம் போன்ற பறவைகளைப் பற்றியும், குறிப்பிடுகின்றன. அவை கற்பனைதான்; இப்பறவை கள் இருந்ததற்கான ஆதாரம் இல்லை. பறவைகளுக்கு ஆங்கிலத்தில் சரியான பெயர்கள் உண்டு; தமிழில் அப்படி இல்லை. ஒவ்வொரு இடத்திலும், ஒரு பெயரில் அழைக்கப்படுகிறது. பறவை ஆய்வாளர்கள் இதற்கான பொதுப் பெயர்களை வைக்கவும், பட்டியலிடவும் ஆவன செய்ய வேண்டும்.

பறவைகள் வாழ்வதற்கு உகந்த நிலவியல் சூழல், இந்தியாவில்தான் உண்டு. வெளிநாட்டு பறவைகள் வேடந்தாங்கலுக்கு, இனப்பெருக்கம் செய்ய வருவதாக சொல்கின்றனர்; அது உண்மை இல்லை. எந்த இடம் பறவைகள் இன விருத்தி செய்ய ஏற்ற இடமாக உள்ளதோ, அந்த இடமே அப்பறவைக்கான தாயகம். எனவே, வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள், வெளி நாட்டு பறவைகள் அல்ல; அவை அனைத்தும் நம் நாட்டு பறவைகள்தான். இவ்வாறு, ரத்தினம் பேசினார்.

ஓசை அமைப்பின் தலைவர் காளிதாசன், கல்வெட்டியல் ஆய்வாளர் ஜெகதீசன், பேரூர் ஜெயராமன், கவிஞர் அவைநாயகன், செந்தில்ரத்தனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இலவச குருவிக் கூடு

ஒரு காலத்தில், கோவை முழுக்க வலம் வந்த, குருவிகள் இன்று இல்லை. இன்றைய நகரத்து வீடுகள், குருவிகள் கூடு கட்ட ஏற்றதாக இல்லை என்பதே இதற்குக் காரணம். தற்போது, குருவிகள் காணப்படுகிற, ஒரு சில பகுதிகளில் உள்ள வீடுகளில், "நெஸ்ட் பாக்ஸ்' என்றழைக்கப்படும், செயற்கைக் கூடுகளை வைத்தால், குருவிகள் மீண்டும் கோவைக்குத் திரும்ப வாய்ப்புகள் உண்டு. இது குறித்து, "குடியிருக்க ஒரு வீடு; குருவிக்கும் ஒரு கூடு' என்னும் தலைப்பில் தினமலரில் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.

அதில், "நெஸ்ட் பாக்ஸ்' தேவைப்படுவோருக்கு, ஓசை அமைப்பின் சார்பில், கூடுகள் வழங்கப்படும் என்று, "ஓசை' காளிதாசன் கூறியிருந்தார். அதன்படி, இந்த சூழல் சந்திப்பில், "நெஸ்ட் பாக்ஸ்'கள் வழங்கப்பட்டன.

 

நிலம் வாழ
நீர் வாழ
நம் தலைமுறைகள் தழைத்து வாழ..

இயற்கை காக்கும் எமது பணிகளில் நீங்களும் பங்கேற்கலாம்