| Enviro Meet February 2012 |
|
|
| Written by osai |
|
ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் 'சூழல் சந்திப்பு' 26.02.2012 அன்று மாலை 6:30 மணியளவில் கோவை காந்திபுரம் தமிழ்நாடு உணவக அரங்கில் நடைபெற்றது. இதில், திரு.வே.திருநாவுக்கரசு,இ.வ.ப, மாவட்ட வன அலுவலர், கோவை கோட்டம் அவர்கள் 'காடுகளைப் பாதுகாப்பது யாருக்காக ?' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். திரு. க. ச. உமாசங்கர், ஐஸ்வர்யா என்டர்பிரைசஸ் தலைமை தாங்கினார். திரு.வே.திருநாவுக்கரசு அவர்கள் பேசியதாவது: இந்திய வன அளவீட்டு அமைப்பு (Forest Survey of India) இரண்டாண்டிற்கு ஒரு முறை நம் காடுகளின் நிலை எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்து அறிக்கை தருகிறது. அதன்படி 2009-2011ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 287 சதுர கிலொமீட்டர் அளவுக்கு பசுமைப் பரப்பு அதிகரித்திருப்பதாக அறிவித்துள்ளது. இது நமக்கு மகிழ்ச்சியான செய்தி. தனிநபர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகள் ஆகியவை காடுகளுக்கு வெளியே தொடர்ந்து செய்து வரும் மரம் வளர்ப்புப் பணியே இதற்குக் காரணமாகும். கோவை மாவட்டத்தில் 2007-2009 ஆண்டுகளில் 5ச.கிமீ குறைந்து போனதாக கணக்கிடப்பட்டிருந்தது, ஆனால் தற்போது 2 ச.கிமீ பசுமைப்பரப்பு அதிகரித்திருப்பதை அறிக்கை தெரிவிக்கிறது. நாட்டின் வறுமையை ஒழிக்காமல் வனப் பாதுகாப்பு முற்றிலும் சாத்தியமாகாது. கோவை நகரில் அனைத்து வசதிகளோடும் நாம் வாழ்கிறோம். எல்லாவகையிலும் வளர்ச்சி பெற்றுள்ள இந்த மாவட்டதில் இன்னும் வயிற்றுப் பசியோடு வாழும் பழங்குடி மக்களும் உள்ளனர். 37 பழங்குடி குடியிருப்புகள் கோவை வனக்கோட்டத்தில் உள்ளது. அவற்றில் பலவற்றில் குடியிருக்க சரியான வீடோ, மின்சார வசதியோ கூட கிடையாது. அவர்களின் வாழ்வுநிலையைiர்த்தாமல் காடுகளையும் வன உயிரினங்களையும் பாதுகாக்க முடியாது. நான் வால்பாறையில் பிறந்து, பின்னர் வேறு பகுதிக்குக் குடிபெயர்ந்தாலும், எனது தந்தையார் தீப்பந்த்களுடன் பகுதியில் நடந்தே போனது நினைவிருக்கிறது. அப்போதும் விலங்குகள் உண்டு. ஆனால் மக்களிடம் எச்சரிக்கை உணர்விருந்தது. நாம் இப்போது சொகுசு வாழ்க்கைக்குப் பழகிவிட்டோம். சைக்கிளை மறந்து விட்டோம். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இயற்கை பாதுகாப்பிற்கான செயல்பாடுகள் தொடங்கப்பட வேண்டும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. ஒரு டன் காகிதம் தயாரிக்க 3 டன் மரங்கள் வெட்டப்படுகின்றன. காகித ஆலைக் கழிவுகளால் நீர்நிலைகள் பாதிப்படைகின்றன. காகிதப் பயன்பாட்டை குறைக்க நம்மால் முடியும். கொடைக்கானலில் நான் பணியாற்றும்போது ஒவ்வொறு மாதமும் 2 லாரிகள் அளவு பிளாஸ்டிக் குப்பைகளைப் பொறுக்கி வெளியேற்றினோம். அம்மலைப் பகுதி பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்ட இடமாகும். ஆனால் பொறுப்பற்ற சில சுற்றுலா பயணிகளால் இப்படி குப்பையாக்கப்படுகிறது. நாம் சட்டத்தை மதிக்கத் தயங்கிறோம். சிலர் சட்டத்தை மதிக்கவே மறுக்கின்றனார். நாம் நிறைய அறிவுரை சொல்கிறோம். ஆனால் நாமே அதன்படி நடந்து கொள்வதில்லை. என் ஜப்பான் பயணத்தின்போது டோக்கியோ நகரில் ஒரு ஹார்ன் சத்தத்தை கூட கேட்க முடியவில்லை. ஜப்பானியர்கள் சட்டத்தை மதிக்கின்றனர். சாலை விதிகள் சரியாக கடைபிடிக்கப் படுகிறது. கார் ஒட்டுபவர்கள் நடந்து போவோருக்கும், சைக்கிளில் போவோருக்கும் அங்கு முக்கியத்துவம் தருகின்றனர். பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது மிக அவசியம். நமக்கு சிறிதளவு சிரமம் என்றாலும் அதை நாம் செய்வதே எதிர்கால தலைமுறையைக் காப்பாற்றும். இன்று வளர்ச்சியின் வேகத்தில் முதலில் பலியாவது மரங்களே. மரங்களை வெட்டாமல் மாற்று வழியில் வளர்ச்சி பணிகள் அமைப்பது பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. 2002 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்தில் மைதானத்தின் உள்ளே மரம் இருப்பதை பார்த்தோம். நம் நாட்டில் இது சாத்தியமாகுமா ? 120 கோடிபேர் உள்ள இந்த நாட்டில் இயற்கைப் பாதுகாப்பு வனத்துறையினரால் மட்டுமே சாத்தியமானதல்ல, மக்கள் எல்லோருடைய பங்களிப்பும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் காப்பாற்ற முடியும். |
Hoolock Gibbon is the only ape found in India (Northeast India) and is extremely endangered.
இயற்கை காக்கும் எமது பணிகளில் நீங்களும் பங்கேற்கலாம்