Home Enviro Meet Enviro Meet March 2012
Enviro Meet March 2012 Print E-mail
Written by osai   

உலக வன நாளை முன்னிட்டு "ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் சிறப்பு 'சூழல் சந்திப்பு' 25.03.2012 அன்று மாலை 6:30 மணியளவில் கோவை காந்திபுரம் தமிழ்நாடு உணவக அரங்கில் நடைபெற்றது.

திரு. மகேந்திரா ராம்தாஸ், நிர்வாக இயக்குனர், மகேந்திர பம்ப்ஸ் அவர்கள் தலைமை வகித்தார்.

இதில், திரு. ச. சசிகுமார்,இ.வ.ப., மண்டல பாஸ்போர்ட் அலுவலர், கோவை அவர்கள் 'மனித-வன உயிரின மோதல்கள்- எனது அனுபவம்' எனும் தலைப்பில், வன அதிகாரியாக பணியாற்றியபோது, ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி, கூறியதாவது:

யானை-மனித இன மோதலுக்கு, எல்லையோர மக்களிடம் உள்ள, அறியாமையே முக்கிய காரணம்; மனித இனம், யானைகளை புரிந்து கொள்ளும் வரை, எதை கொண்டு விரட்டினாலும், வீண்தான் என பேசினார்.

மேற்கு வங்கம், அதிக வனங்கள் சூழ்ந்த மாநிலம்; இம்மாநிலத்தின், மொத்த வன வளம், 11,879 சதுர கி.மீ., பரப்பளவும், சதவீதத்தில் 13.38 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இங்குள்ள மரங்கள், அதிக மதிப்பு கொண்டவையாக, உள்ளன. இக்காடுகள் மூலமாக, மேற்கு வங்கத்துக்கு, கடந்த 2009-10ம் ஆண்டில், 6,401.94 லட்சம் ரூபாய், வருமானமாக கிடைத்துள்ளது.

மரங்கள் அதிக மதிப்பும், விலையும் கொண்டவையாக, இருக்கும்போது, அங்கே திருட்டு மட்டும் என்ன, விதிவிலக்கா? காடு வளத்துக்கு ஏற்ப, அங்கே மரங்கள் வெட்டப்பட்டு, பல்வேறு வழிகளில், கடத்தப்படுவது வழக்கம். உதாரணமாக, வெட்டப்படும் மரங்கள் சிறு, சிறு துண்டுகளாக்கப்பட்டு, கை வாகனங்கள் மூலம், காட்டுக்கு வெளியில் கொண்டு வரப்படும். தொடர்ந்து, கார்களில் பிணங்களை போல் வைத்து செல்லுதல், ரயில்களில் கடத்துதல், அருகில் ஓடும் ஆறுகளில், மரங்களை வெட்டி போடுதல் உள்ளிட்ட, பல்வேறு முறைகளில், சீனா, பூடான், வங்கதேசம் நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன.

முதன்முறையாக, ஒரு வன அதிகாரி பதவிக்கு வரும்போது, இங்கே பணி புரிந்தால் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளும் அனுபவம், மேற்கு வங்க காடுகளில் கிடைக்கும். அவ்வளவு அச்சுறுத்தல் மிக்க வனப்பகுதி. அதேபோல், அரசும் சளைக்கவில்லை; வனங்களை பாதுகாப்பதில். அதிக கவனம் செலுத்தி வருகிறது.

உதாரணமாக, போலீசில் ஐ.ஜி., மதிப்பு கொண்ட அதிகாரிகள், அங்கே வனத்துறை அதிகாரிகளாக, பணியமர்த்தப்படுகின்றனர். இதனால், வனத்துறைக்கும், போலீசாருக்கும், இடைவெளி குறைக்கப்படுகிறது; அனைத்து மாவட்டங்களிலும், வன அதிகாரியுடன், 40 மாநில ஆயுதப்படையினர், நியமிக்கப்படுகின்றனர். பிற மாநிலங்களில், இத்தகைய முக்கியத்துவம், வனத்துறைக்கு அளிக்கப்படுவதில்லை. ஒரு மரம் வெட்டப்படும்போது, எவ்வளவு ஆக்ஸிஜன் இழக்கப்படுகிறது என்பதை, மக்கள் சிந்திக்க வேண்டும். அனைத்து பிரச்னைகளுக்கும், காடுகள்தான் தீர்வாக உள்ளன; ஆகவே, காடுகள் நமக்கு தேவை.

இது தவிர, இந்தியாவில், அதிக மனித-விலங்கு மோதல் நடக்கும் மாநிலமாகவும், மேற்கு வங்கம் கண்டறியப்பட்டுள்ளது. அதில், யானை-மனித இன மோதலில் மட்டும், ஆண்டுதோறும், சராசரியாக 25 யானைகளும், 60க்கும் மேற்பட்ட மனிதர்களும், இறக்கின்றனர்; 100 பேர் வரை காயம் அடைகின்றனர்.

இதற்காக, மேற்கு வங்கத்தில், யானைகளை கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், தனியாக பதிவேடு முறை, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், அவற்றின் எண்ணிக்கை மற்றும் செல்லும் இடங்களை, சீராக அறிய முடியும்.

இம்மாநிலத்தின், தென்மாவட்டங்களான, தல்மா-பான்குரா மாவட்டங்களுக்கிடையிலான வனப்பகுதியில், அதிக யானை-மனித இன மோதல்கள், நடக்கின்றன. இங்குள்ள மக்கள், யானைகளை விரட்ட புலி சிறுநீர்; மிளகு மற்றும் மிளகாய் தூள், பட்டாசுகள், மின்வேலிகள் உள்ளிட்ட, சில தடுப்பு முறைகளை, பயன்படுத்துகின்றனர். இதனால், எந்த பயனும் கிடையாது.

கோவையிலும்,எல்லைப் பகுதிகளில், இதே யானை-மனித இன மோதல், அதிகரித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம், எல்லையோர பகுதி மக்களிடம் உள்ள அறியாமையே. அப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு, யானைகள் குறித்த, சரியான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிராமங்களில் சிறு, சிறு குழுக்களை உருவாக்கி பாதுகாப்பு நடவடிக்கைகள், யானைகள் கடக்கும்போது, நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றி, விவாதிக்க வேண்டும். பொதுமக்களும், யானைகளை ஈர்க்கும் உணவுகளை, வழித்தடங்களில் பயிரிடுவதை மாற்றி, எதிர்மறையான பயிர்களை பயிரிட, பழக வேண்டும்.

யானைகள், நமக்கு எதிரிகள் அல்ல; அவை, நமது வனத்தின் சொத்துகள். அவற்றை நாம்தான் புரிந்து. விலக வேண்டும். மனித இனம், யானை இனத்தை புரிந்து கொள்ளும் வரை, எதை கொண்டு தடுத்தாலும் வீண்தான்.இவ்வாறு, சசிகுமார் பேசினார்.

 

நிலம் வாழ
நீர் வாழ
நம் தலைமுறைகள் தழைத்து வாழ..

இயற்கை காக்கும் எமது பணிகளில் நீங்களும் பங்கேற்கலாம்