| Enviro Meet January 2011 |
|
|
| Written by osai |
|
ஓசை சுற்றுச் சூழல் அமைப்பின் ஜனவரி மாத சூழல் சந்திப்பு நிகழ்ச்சி, கோவை, காந்திபுரம் தமிழ்நாடு உணவக அரங்கில் கடந்த 23.01.2011 ஞாயிறு மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புலவர் ராஜு தலைமை தாங்கினார். இதில் 'காடு - மக்களுக்காக' என்ற தலைப்பில் திரு. கணேசன் டி.எப்.ஓ., தேனி மாவட்டம் சிறப்புரையாற்றினார். "காடு-மக்களுக்காக' என்ற தலைப்பில் டி.எப்.ஓ., கணேசன் பேசியதாவது: காடுகளை உண்மையாக நேசித்து, பணியாற்றுபவர்களால் மட்டுமே வனத்துறையில் நீடித்து இருக்க முடியும். நாட்டிலேயே வன மேலாண்மை துவங்கியது தமிழகத்தில்தான். பதவி உயர்வு, பெருமை, அதிகாரம் போன்றவற்றைப் பார்க்காமல் பலர் பணியாற்ற இயற்கை மீதான ஈடுபாடே காரணம். காடுகளுக்கு இறைத்தன்மை இருப்பதாக உணர்பவன் நான். வனத்துறையில் பணியாற்றும்போது, "காடுகளுக்கு ராஜா' என்ற கர்வம் இருக்கும்; அது வெறும் கர்வம் மட்டுமில்லை; அதன் மீதிருக்கும் அதீத காதலின் வெளிப்பாடு. காடுகளில் களப்பணி செய்வதை அனுபவித்து உணர்பவர்களால் மட்டுமே, இயற்கையைக் காப்பாற்ற முடியும்; வெறும் புத்தக ஆராய்ச்சிகளால் காட்டை உணர முடியாது. இயற்கை சொல்லும் பாடத்தை, எந்தப் பல்கலையும் சொல்லித்தர முடியாது. தமிழக வனத்துறை, 154 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மரங்களை வெட்ட உருவாக்கப்பட்ட இந்த துறைதான்,காட்டைக் காக்கும் பணியைச் செய்கிறது. நம்முடைய காட்டை பெருமளவில் அழித்தது ஆங்கிலேயர்கள்தான்; அதே காட்டை அளவு கடந்து நேசித்தவர்களும் அவர்கள்தான். வேற்று மண்ணில் பிறந்து, இந்த காட்டை அணு,அணுவாக ஆராய்ந்து, நிறைய புத்தகங்களை எழுதி, இயற்கையின் மகத்துவத்தைப் பதிவு செய்தவர்கள் அவர்களே.நம்முடைய காடுகள், நம் வசம் வந்த பின்னும் அத்தகைய படைப்புகள் உருவாக்கப்படவில்லை; ஏனெனில், அவர்களுக்கு இருந்த புரிதலோ, தாக்கமோ இப்போது இல்லை. உலகின் மக்கள்தொகை 700 கோடியைத் தொட்டு விட்டது; இன்னும் 160 கோடி பேர், காடுகளை நம்பி வாழ்கின்றனர். ஆண்டுக்கு 1.6 லட்சம் ஹெக்டேர் காடு அழிக்கப்படுகின்றன. வெப்ப மண்டலக் காடுகள், பசுமை மாறாக் காடுகள் என பாரபட்சமின்றி காடுகள் அழிக்கப்படுகின்றன. இயற்கையை நேசிப்பதாகக் கூறும் பலருக்கு உலகளாவிய பார்வை இருக்கிறது; ஆனால், உள்ளூர் அளவிலான நடவடிக்கை கூட இல்லை. காட்டின் மகத்துவத்தை இப்போதுதான் தேசங்கள் உணர ஆரம்பித்திருக்கின்றன. மக்களுக்காக காடு இருப்பது உண்மைதான். வாழ்வின் ஜீவாதாரமான தண்ணீர் உட்பட பலவற்றையும் காடுதான், மக்களுக்குத் தருகிறது. தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உயிர் நாடியாக விளங்கும் வைகை ஆறு, உற்பத்தியாகும் இடம், தனியார் கையில் உள்ளது. அந்த இடத்தில் தேயிலைத் தோட்டம் உருவானால், வைகையும் வற்றிப்போகும். வனத்துறை கூடிய வரை தடுத்துக் கொண்டிருக்கிறது. இயற்கை சொத்தைக் காக்க, அதிகாரத்தில் இருப்பவர்களிடம் மாற்றம் வர வேண்டும். பாதுகாக்கவேண்டிய பல இடங்கள், தனியார் கையில் இருக்க ஆங்கிலேயர் உருவாக்கிய நில வகைப்பாடே காரணம். நிலங்களை நிர்வகிக்கக் கூடிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு, இயற்கையைப் பற்றிய அறிவோ, ஈடுபாடோ இருப்பதில்லை. காக்க நினைப்பவர்களிடம், அதிகாரம் கிடைப்பதில்லை. விஞ்ஞானப்பூர்வமான நிலக்கொள்கை, நீர்க்கொள்கை வகுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். இவ்வாறு தேனி டி.எப்.ஓ., கணேசன் பேசினார். நிகழ்ச்சிக்கு புலவர் ராஜூ தலைமை வகித்தார். ஓசை அமைப்பின் செயலாளர் அவை நாயகன் வரவேற்றார்; அமைப் பின் தலைவர் காளிதாசன் நன்றி கூறினார். |
Hoolock Gibbon is the only ape found in India (Northeast India) and is extremely endangered.
இயற்கை காக்கும் எமது பணிகளில் நீங்களும் பங்கேற்கலாம்