Home Our Activities Rescue King Cobra Rescue
King Cobra Rescue Print E-mail
Written by M.Ganesh   

கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.11.2011) கோவை வாளையார் அருகிலுள்ள சின்னாம்பதி பகுதியில் வசிக்கும் எங்கள் ஓசை அமைப்பின் உறுப்பினர் திரு. பிரகாஷ் நாயர் எங்களை அழைத்தார். தமது வீட்டின் அருகே ஒரு பெரிய பாம்பு வந்திருப்பதாகவும் அது கரிய நிறத்தில் மஞ்சள் பட்டைகளுடன் காணப்படுவதாகவும் கூறினார். மிக நீளமான அந்த பாம்பின்மீது அருகிலுள்ளவர்கள் கல்லெறிவதாகவும் கூறினார். அவர் கூறியதிலிருந்து அது இராஜநாகமாக (King Cobra, Ophiophagus hannah) இருக்கலாம் என நாங்கள் யூகித்தோம். எனவே பாம்புகளை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்ற, கோவை GRD கல்லூரி மாணவர் திரு. நிர்மலுக்கு தகவல் தந்தோம். அவர் தமது நண்பருடன் சின்னாம்பதி சென்றார். அவர் செல்வதற்குள் பாம்பு எங்கோ மறைந்துவிட்டது. அவர்கள் தேடியபோது குடியிருப்புப் பகுதி அருகே உள்ள ஒரு புதரில் பாம்பு இருப்பதைக் கண்டுபிடித்தனர். அது இராஜநாகம் என்பதை உறுதி செய்தனர். உடனே வனத்துறைக்கு நாங்கள் தகவல் தெரிவித்தோம் மாவட்ட வன அலுவலரின் அறிவுரைப்படி அந்த பாம்பை பிடித்து காட்டிற்குள் விட முடிவு செய்தோம். நிர்மல் அந்த பாம்பை மிக லாவகமாக பிடித்தார். அப்போது அது ஏற்கனவே விழுங்கியிருந்த சாரைப்பாம்பை கக்கிவிட்டது. பிடிபட்ட பாம்பு அருகிலுள்ள காட்டில் விடப்பட்டது. அந்த பாம்பு சுமார் 12 அடி நீளம் கொண்டது.

இராஜநாகங்கள் ஈரமும், வெதுவெதுப்பும் உள்ள மனித நடமாட்டமற்ற பகுதிகளில் வாழும் பாம்பு. கூடுகட்டி முட்டையிடும் அறிய பாம்பு இது. சுமார் 18 அடி நீளம் வளரக் கூடியது. இராஜநாகம் உலகின் மீக நீளமான நச்சுப் பாம்பாகும். இதன் விஷத்தின் வீரியம் நாகப்பாம்பை விட குறைவானது எனினும் அது கொண்டிருக்கும் விஷத்தின் அளவு அதிகம். ஒரு யானையையே கொல்லும் அளவு விஷம் கொண்டிருக்கும். இது அரிதிலும் அரிதாகவே மனிதர்களைக் கடிப்பதால் இந்த பாம்பை Gentleman Snake என்று அழைப்பார்கள். பரம்பிகுளம், டாப்சிலிப்பில், கூடலூர் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் இராஜநாகங்கள் கோவை வனப்பகுதியில் காணப் பட்டிருப்பது அறிய செய்தியாகும். பெரும் மழைக்காரணமாக அது காட்டைவிட்டு வெளியேறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 

நிலம் வாழ
நீர் வாழ
நம் தலைமுறைகள் தழைத்து வாழ..

இயற்கை காக்கும் எமது பணிகளில் நீங்களும் பங்கேற்கலாம்